வடக்கில் படையினர் வசமுள்ள தமிழரின் காணிகளை ஒப்படைக்க உத்தரவு
வடக்கில் பாதுகாப்பு தரப்பினரால் பயன்படுத்தப்பட்டு வந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள 100 ஏக்கர் காணியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு அதிபர் செயலக பிரதானி அதிபரின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கில் உள்ள தமிழ் மக்கள், பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படும் தமது தனியார் காணிகளை வழங்குமாறு கோரி வருவதால், அடையாளம் காணப்பட்ட காணிகளில் இயங்கி வந்த இராணுவத் தளங்களை வேறு இடங்களில் நிறுவ வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில்
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்துடன் இணைந்து நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் மாவட்டச் செயலாளர்கள் ஊடாக இந்தக் காணிகளின் உரிமை மக்களிடம் கையளிக்கப்படும் எனவும், மேலதிகமாக காணிகள் இருந்தால் அவர்களின் சட்ட நிலையைப் பார்த்த பிறகு ஒப்படைக்கப்படும் எனவும் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார்.