பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டம் : நீதிமன்றில் முன்னிலையான 19 பேர்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி(p2p) வரையிலான நடைபயணி போராட்டத்தில் கலந்து கொண்ட மல்லாவி வர்த்தகர்கள் , மல்லாவி இளைஞர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு மாங்குளம் நீதிமன்றினால் அழைப்பாணை வழங்கப்பட்ட நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்றைய தினம்(06) மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
கடந்த 3ஆம் திகதி 02ம் மாதம் 2021 அன்று கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் பொத்துவிலிலிருந்து யாழ்ப்பாணம் மாவட்டம் பொலிகண்டியை நோக்கிய பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
மல்லாவியில் பங்கேற்ற வர்த்தகர்கள் மற்றும் இளைஞர்கள்
குறித்த பேரணி மல்லாவி பகுதியில் வருகை தரும் பொழுது மல்லாவிப்பகுதியில் உள்ள வர்த்தகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் , இளைஞர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட 19 நபர்கள் மீது மல்லாவி காவல்துறையினரால் B/229/21 இலக்கமிடப்பட்ட வழக்கானது மாங்குளம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்றைய தினம் மாங்குளம் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்காளிகள் சார்பாக மல்லாவி காவல்துறையினரும் , எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி வீ.எஸ்.எஸ் தனஞ்சயன் உட்பட மேலும் மூன்று சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.
சட்டத்தரணிகள் முன்வைத்த வாதம்
குறித்த வழக்கில் “இது ஒரு அமைதியான பேரணி ,பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான குறித்த போராட்டம் தமிழ் தேசிய இனத்தினுடைய அரசியல் உரிமைகளை வெளிப்படுத்தி நடாத்தப்பட்ட மற்றும் அமைதி வழியில் இடம்பெற்ற பேரணி .என்று எதிராளிகள் சார்பில் விண்ணப்பத்தினை மன்றுக்கு சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை போராட்டங்களை ஒருங்கிணைக்க , நடாத்த அரசியல் அமைப்பின் உறுப்புரை 14 இன் அடிப்படையில் உரிமை காணப்படுகின்றது என்பதனையும் நீதிமன்றிற்கு எதிராளிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழாம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் 29.10.2025 அன்றுக்கு தவணையிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |