பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை! தமிழர்களுக்கும் நேர்ந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டு
பலஸ்தீனத்தில் (Palestine) தற்போது இடம்பெறும் இனப்படுகொலை தான் இலங்கையில் (Sri Lanka) தமிழர்களுக்கும் நேர்ந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M.A. Sumanthiran) சுட்டிக்காட்டியுள்ளார்.
பலஸ்தீனுக்காக தற்போது குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது என இன்றைய (14) நாடாளுமன்ற அமர்வின் போது அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம் புலப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த மக்களை நினைவு கூரும் வாரமாக இந்த வாரம் இருக்கின்றது.
போர் வலயத்திற்குள் 4 இலட்சம் மக்கள் சிக்கியிருந்தனர். அவர்கள் உண்ண உணவின்றி உப்பில்லா கஞ்சியையே அருந்தினார்கள். இதனை நினைவு கூரும் வகையில் அங்கு கஞ்சி பரிமாறப்படுவது வழக்கமாகும்.
இலங்கையில் யுத்தத்தில் ஏற்பட்ட மக்கள் இழப்புகளை நினைவுகூரும் நாளாகவே இதனை பார்க்கின்றோம். எமது மக்கள் இறுதி கட்ட யுத்தக் காலத்தில் கஞ்சியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போராடினார்கள்.
கைது நடவடிக்கை
இதனை நினைவுகூர இடமளிக்காமை அரசாங்கத்தின் அவல நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றது. இந்த விடயத்தில் சம்பூரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட முறையை பார்த்தோம்.
குறித்த பெண், ஆண் காவல்துறை அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். கஞ்சியை அருந்தியதாகவே அவரை இழுத்துச் செல்கின்றனர்.
கஞ்சி விவகாரத்தில் காவல்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவுகளையும் பெற்றுக் கொள்கின்றனர்.
இரட்டை நிலைப்பாடு
இந்த நேரத்தில் பலஸ்தீனத்தில் இறக்கும் மக்கள் தொடர்பில் பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இங்கே இறந்தவர்கள் தொடர்பில் நிலைப்பாடு என்ன?
இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? பலஸ்தீனத்தின் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள். அந்த அக்கறை எங்கள் மக்கள் மீது இல்லையா?
பலஸ்தீன விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச தலையீடு அவசியம் என்றும் கூறும் நீங்கள் ஏன் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூறும் போது உள்ளக விவகாரம் என்று கூறுகின்றீர்கள்?
சுதந்திரமான விசாரணை
இது இரட்டை வேடத்தையே காட்டுகின்றது. யுத்தம் என்பது சுத்தமானதாக இருக்க முடியாது. ஒரு சுதந்திரமான விசாரணை அவசியமாகும்.
It is always useful for leaders of countries, whose popularity is dipping, to show an enemy of the state & then become popular on that. This is the most heinous way of remaining in power. We have seen that happening in this country too. - @MASumanthiran #SriLanka #Palestine… pic.twitter.com/02eAJ5gnjj
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) May 14, 2024
ஆனால், இங்கே உள்ளக விசாரணை தொடர்பில் கூறிக்கொண்டு ஒரு தரப்பு விசாரணையை முன்னெடுக்கின்றனர்.
இஸ்ரேல் தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிகின்றோம். ஆனால் அதே மனசாட்சியுடன் இங்கு 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், உள்ளக பொறிமுறை என்று கூறிக்கொண்டு ஏன் இவ்வாறு நயவஞ்சகமாக செயற்படுகின்றீர்கள்?”என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |