நாடாளுமன்றம் வன்முறைக்களமாக மாறும் அபாயம்!! திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார்.
நுவரெலியாவிற்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட அவர், இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும் என்றும் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
''எதிரணி எம்.பிக்களுக்கு எதிரான அச்சுறுத்தலை ஒருபோதும் ஏற்கமுடியாது. எனவே தான், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை சபை அமர்வுகளை புறக்கணிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
நாடாளுமன்றம் தொடர்பில் மக்களுக்கு தற்போது நன்மதிப்பு இல்லை. எனவே, நாடாளுமன்றத்துக்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுத்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கும், கட்சித் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது.
அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாடாளுமன்றமும் வன்முறைக்களமாக மாறும் அபாயம் உள்ளது'' என அவர் எச்சரித்துள்ளார்.