உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கான அங்கீகாரம் வேண்டும் : கபே அமைப்பு வலியுறுத்து
பெண்களின் திறமைக்கும் அவர்களது சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவதை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உறுதிசெய்ய வேண்டும் என கபே(Caffe) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் முகமட் மனாஷ் மகீன் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான டிஜிட்டல் மற்றும் ஊடகப் பாதுகாப்பை மையப்படுத்திய 3 நாள் பயிற்சி பட்டறை நிகழ்வானது யாழ்ப்பாணத்திலுள்ள(Jaffna) தனியார் விடுதி ஒன்றில் இன்றையதினம் (08.03.2025) ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெண்களிடையே இருக்கும் ஆற்றல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது அமைப்பால் பல்வேறு பயிற்சிப்பட்டறைகள் மற்றும் திட்டங்களை பெண்களுக்காக மேற்கொண்டுள்ளபோதும் இணைய உலகில் பெண்களிடையே இருக்கும் ஆற்றல்களை செழுமைப்படுத்தி இன்றைய உலகின் வேகத்துக்கேற்ப புதிய உத்வேகத்துடன் அவர்களை வெளிக்கொண்டுவரும் களத்தை உருவாக்கும் முயற்சியாவே குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக நாடளாவிய ரீதியில் அரசியல் பிரவேசத்தை முன்னெடுக்கவுள்ள அல்லது அரசியல் நீரோட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பெண்கள் நவீன உலகின் தேவைக்கேற்ப ஆற்லுள்ளவர்களாக பரிணமிக்க வேண்டியது அவசியம்.
அதற்காக அவர்கள் தங்களை இன்றைய நவீன தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் பக்கமும் ஈடுபடுத்திக் கொள்வது அவசியமாகும்.
இதில் “கபே”அமைப்பு நாடு முழுவதும் இவ்வாறான திட்டங்களை பெண்களிடையே கொண்டுசென்று அதில் வெற்றியும் கண்டுள்ளது.
பெண்களின் டிஜிட்டல் பாதுகாப்பு
இந்நிலையில், சமூக ஊடக பங்களிப்பிலும் பெண்களின் வகிபாகம் முதன்மை வகிக்க வேண்டும் என்ற நோக்கில் குறித்த நாடு முழுவதும் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கான டியிற்றல் மற்றும் ஊடக பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்றை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு அமைகின்றது.
இதேநேரம், பெண்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் ஊடகப் பாதுகாப்பை அரசியல் கட்சிகளும் துறைசார் அமைச்சும் உறுதிப்படுத்துவது அவசியம்.
அத்துடன் கூகுள் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களும் இதை உறுதி செய்வதற்கு தமது ஒத்துழைப்பகளை வழங்க வேண்டும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இதேநேரம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுக்களின் போது வேட்புமனுவில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக என்ற போர்வையில் பெண் வேட்பாளர்களை உள்ளீர்க்க வேண்டாம் என நாம் அனைத்து அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுகின்றோம்.
பெண்களின் பங்களிப்பு
குறிப்பாக பெண்களின் பங்களிப்பை தேவைக்கானதாக எடுத்துக் கொள்ளாது அவர்களது திறமைகளினதும் மக்கள் மத்தியில் அவர்கள் ஆற்றிய சேவைகளினதும் அடிப்படையில் முன்னிறுத்து கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பெண்களுக்கு வாய்ப்புக்களை கொடுக முன்வர வேண்டும்.
இதேவேளை பெண்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் ஊடகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குறிப்பாக பெண்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். சைபர் குற்றங்கள், ஆன்லைன் துன்புறுத்தல், தவறான தகவல்கள் மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இவற்றில் முன்னிலை பெறுகின்றன.
இவ்வாறு ஊடகங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பது மற்றும் தவறான தகவல்களை பரப்புவது போன்றவை பெண்களின் பாதுகாப்பை பெரிதும் கேள்விக்குறியாக்குகின்றன.
பெண்களின் உரிமைகள்
குறிப்பாக இவ்வாறான டிஜிட்டல் மற்றும் ஊடக வன்முறைகள் பெண்களின் உரிமைகளை மீறுகின்றன. இந்நிலையில் பெண்களின் கருத்து சுதந்திரம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சமத்துவமான பங்கேற்பு போன்ற உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
பெண்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இணையத்தைப் பயன்படுத்தும்போது, அவர்கள் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு மட்டுமல்லாது அரசியல் பிரவேசத்தினூடாகவும் தமது மக்களுக்கு பங்களிக்க முடியும்.
இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பான ஊடக பங்கேற்பு, சமூக விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான முயற்சியாகவே இந்த பயிற்சிப் பட்டறை அமைகின்றது.
எனவே, அரசியல் கட்சிகளும் துறைசார் அமைச்சு மட்டுமல்லாது ஊடகங்களும் இணைந்து செயல்பட்டு, பெண்களின் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் ஊடகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்