அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு : வெளியாகவுள்ள தீர்ப்பு
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு உத்தரவிடக்கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல்நிலை எதிரீடு தொடர்பான தீர்ப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மே மாதம் 5 ஆம் திகதி குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18) உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் லஃபார் தாஹீர் மற்றும் கே. பி. பெர்ணான்டோ ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட மனு
இந்த சம்பவம் தொடர்பில் உரிய எழுத்து மூல சமர்ப்பிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கு நீதியரசர்கள் ஆயம் அனைத்து தரப்பினருக்கும் ஒருவாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
அத்துடன் இந்த மனுவை தொடர முடியாது எனச் சட்டமா அதிபர் உட்படப் பிரதிவாதிகளால் எழுப்பப்பட்ட முதல்நிலை எதிரீடு தொடர்பான தீர்ப்பு மே மாதம் 5 ஆம் திகதி அறிவிப்பதற்கு நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்தது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவால் (Renuka Perera) இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உறுப்பினர் பதவி
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஜனாதிபதி செயலணி தலைவராகவும் செயற்பட்டு வருவதாகத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலணியின் தலைவர் பதவி அரச பதவி எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு அவ்வாறான ஒரு பதவி வகிப்பதற்கு அரசியலமைப்பின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிப்பதற்குப் பொருத்தமில்லை எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஆனந்த விஜேபால நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குப் பொருத்தமற்ற நபர் எனவும் அவரது உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு உத்தரவிடுமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்