பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் : நீதிமன்றம் உத்தரவு
பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது காணொளி வழியே பிள்ளையான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அதில் அவர் 3 ஆம் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், கல்லடிப் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் காணிப் பிரச்சினை தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |