இலங்கையர் ஒருவர் உட்பட 17 பேருடன் கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய எண்ணெய் கப்பல்
சோமாலியக் கடற்கரைக்கு அருகில் 17 மாலுமிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றை கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Honour 25 எனப் பெயரிடப்பட்ட இந்தக் கப்பல், கடந்த புதன்கிழமை இரவு கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் இருந்தபோது, ஆறு ஆயுததாரிகளால் முற்றுகையிடப்பட்டுக் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தியப் பெருங்கடலின் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் கடற்கொள்ளைச் சம்பவங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த போதிலும், அண்மைக்காலமாக மீன்பிடி படகுகள் மற்றும் சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்து மீண்டும் இவ்வாறான தாக்குதல்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.
சோமாலிய எரிபொருள் விலை
குறிப்பாக, அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக சோமாலியத் தலைநகர் மொகடிஷுவில் எரிபொருள் விலை ஏற்கனவே மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: Maritime Optima
இந்நிலையில், மொகடிஷுவை நோக்கி 18,500 பீப்பாய்கள் எண்ணெயுடன் பயணித்த இக்கப்பல் கடத்தப்பட்டிருப்பது அந்த நகரில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கப்பலில் ஒரு இலங்கையர் உட்பட 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 17 மாலுமிகள் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல் பயணப்பாதை
கப்பல் தற்போது கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் சோமாலியக் கடற்கரையை ஒட்டிய 'ஹாஃபுன்' (Xaafun) மற்றும் 'பந்தர் பெய்லா' (Bander Beyla) ஆகிய பகுதிகளுக்கு இடையே நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கப்பல் பயணப்பாதை தரவுகளின்படி, பெப்ரவரி 20 ஆம் திகதி சோமாலிலாந்தின் 'பெர்பெரா' (Berbera) துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், போர் தொடங்கிய காலத்தில் ஐக்கிய அரபு அமீரகக் கடற்கரைக்கு அருகில் இருந்துள்ளது.
பின்னர் ஹோர்முஸ் நீரிணையை ஒட்டிய பகுதிகளில் வட்டமடித்துவிட்டு, ஏப்ரல் 2 ஆம் திகதி மொகடிஷுவை நோக்கித் திரும்பிய நிலையில் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்