விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்க சதி: இலங்கைப் பிரஜைக்கு கேரள உயர்நீதிமன்றின் உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ளது.
இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் மொஹமட் அஸ்மின் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ஒரு இலட்சம் இந்திய ரூபாய்
தேசிய புலனாய்வு முகவரகத்தின் (NIA) சிறப்பு நீதிமன்றத்தினால் மன்னிப்பு வழங்கப்பட்டு, அரசுத் தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட ஒருவரைத் தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், அஸ்மினை கேரள சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இணைத்து, அவருக்குத் தேவையான பாதுகாப்பை உடனடியாக வழங்குமாறும் மாநில உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்போதே குற்றவியல் நீதி அமைப்பு சிறப்பாகச் செயற்பட முடியும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பிணை நிபந்தனைகளின்படி, ஒரு இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான பிணைப் பத்திரத்துடன் இரு நபர்களின் உத்தரவாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கடவுச்சீட்டை ஒப்படைப்பதுடன், தற்போதைய முகவரி மற்றும் கைபேசி இலக்கத்தையும் NIA விசாரணை அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் முன்அனுமதியின்றி எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பதுடன், ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் 11 மணி வரை எர்ணாகுளத்திலுள்ள NIA அதிகாரி முன்னிலையில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றக் கும்பல்
வழக்கு தொடர்பாக ஊடகச் சந்திப்புகளை நடத்தவோ, பகிரங்க அறிக்கைகளை வெளியிடவோ கூடாது என்றும், ஏனைய சந்தேகநபர்களுடன் தொடர்புகளைப் பேணக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்தப் பிணை உத்தரவு இந்தியாவில் தங்கியிருப்பதற்கான உரிமையை வழங்காது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
வெளிநாட்டவர் பிராந்தியப் பதிவு அலுவலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும், அவரைத் தகுந்த இடத்தில் தங்க வைப்பதற்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கூறப்படும் மொஹமட் அஸ்மின், பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியாவில் செயற்படும் சர்வதேச குற்றக் கும்பல்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கச் சதித்திட்டம் தீட்டியதாக NIA குற்றம் சாட்டியிருந்தது.
சென்னை கடற்கரைப் பகுதிகள் மற்றும் திருச்சி தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற இரகசியக் கூட்டங்கள் ஊடாக போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் திட்டங்கள் தீட்டப்பட்டதாகவும் விசாரணை அமைப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
300 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின், AK-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 1,000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சதித்திட்டம் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் கடத்தலுக்கு உதவியதுடன், ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சி வழியாகப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாகவும் அஸ்மின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |