யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் காவல்துறை காவலரண் : அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) வேண்டுகோள் விடுத்தார்.
டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள், இ.போ.ச அதிகாரிகள், காவல்துறையினர், சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பின்போது யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்துக்குள் காவல்துறை காவலரண் அமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதனை அமைப்பதற்கான இடவசதி உள்ளிட்ட விடயங்களை காவல்துறையினருக்கு ஏற்படுத்தி கொடுக்குவாறு இ.போ.ச அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
பேருந்து வளாகத்தின் தூய்மை
அத்துடன் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள வியாபார கடைகளால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அக்கடைகளை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டது.
மேலும் பேருந்து வளாகத்தின் தூய்மை தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி பயணிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் இ.போ.ச அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தினார்.
ஆளணிப் பற்றாக்குறை
இதேவேளை குறித்த நடவடிக்கைகளை அடுத்த 10 நாட்களுக்குள் எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டதுடன் சாரதி மற்றும் நடத்துநருக்கான ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இதற்கு முன்பதாக நேற்று(03) பிற்பகல் பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தறிந்த நிலையிலேயே குறித்த கூட்டம் நடைபெற்று இவ்வாறு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
