ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியின் தந்தையிடம் காவல்துறை விசாரணை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியின் (Shashi Punniyamoorthy) வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அவரது தந்தையை விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களினால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) எதிராக நடத்திய போராட்டத்தை செய்தி அறிக்கையிட சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த வழக்குக்கான விசாரணை நீதிமன்றில் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் ஊடகவியலாளரின் வீட்டுக்கு சென்ற காவல்துறையினர் அவரது தந்தையிடம் வாக்குமூலம் பதிவு செய்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தந்தையிடம் விசாரணை
தொடர்ச்சியாக இலங்கை அரச படைகளினாலும் ஆயுதக் குழுக்களினாலும் விசாரணைகள், அச்சுறுத்தல்கள், கொலை மற்றும் அரசியல்வாதிகளினால் அச்சுறுதலுக்கு உட்படுத்தப்பட்டமை காரணமாக ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் சசி புண்ணியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்ற சிவில் உடை அணிந்த காவல்துறையினர் அவரது தகப்பனாரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இலங்கை காவல்துறையினர் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு பிழையான வழக்கு தாக்கல் செய்ததுடன் நீதிமன்றத்தையும் பிழையாக வழிநடத்தும் குறித்த சம்பவம் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சசி புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாறியும் ஊடகவியலாளர்கள் மீதான வழக்குகளும் அடக்குமுறைகளும் ஆயுதக் குழுக்களின் அச்சுறுத்தல்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |