வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் அரச விரோதச் சதிகளை மேற்கொண்டதாக சந்தேகம் - நிஹால் தல்துவ
அரச விரோதச் சதி
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரும் அரச விரோதச் சதிகளை மேற்கொண்டதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த குணதிலக்க மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியை அடுத்து கைது செய்யப்பட்டனர்.
சட்ட விரோதச் சம்பவங்களுடன் தொடர்பு
வசந்த முதலிகேவின் நடவடிக்கைகள் சட்ட விரோதச் சம்பவங்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை மே 9 மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் விசாரணை செய்யும் காவல்துறை குழுக்கள் அவதானித்துள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள 3 பேருக்கும் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்குமாறு காவல்துறை குழுக்களுக்கு காவல்துறைமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்கள் விசாரணை செய்ய அனுமதி