கபில சந்திரசேனவின் இறுதி தொலைபேசி அழைப்புக்கள்...! வீட்டுக்கு பணியாளரிடமும் வாக்குமூலம்
சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன திட்டமிட்ட அடிப்படையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டாரா என்ற சந்தேகம் எழுவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திரசேன தூக்கிடுவதற்குப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் பட்டி, பார்ன்ஸ் பிளேஸிலிருந்து கொள்ளுப்பிட்டி வீட்டுக்கு பணியாளர் ஒருவரின் மூலம் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பட்டியானது கடந்த ஏழாம் திகதி கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பணியாளர் வாக்குமூலம்
பட்டியை கொண்டு வந்து கொடுத்த பணியாளர் இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினரிடம் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் கபில சந்திரசேன தனது சில ஆடைகளுடன் இந்தப் பட்டியையும் எடுத்து வருமாறு கோரியதாகப் பணியாளர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்திரசேன, இந்தப் பட்டியை ஜிம்மிற்கு அடிக்கடி எடுத்துச் செல்வதனால் அது குறித்து தமக்கு சந்தேகம் ஏற்படவில்லை என குறித்த பணியாளர் தெரிவித்துள்ளார்.
உடல் பாகங்கள்
எவ்வாறெனினும் கபில சந்திரசேன எவ்வாறு மரணித்தார் என்பது தொடர்பில் இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.

சந்திரசேனவின் உடல் பாகங்கள் இரசாயன ஆய்வுகூட பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கபில சந்திரசேன சடலமாக மீட்கப்பட முன்னர் அவருக்கு இறுதியாகத் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |