கெஹெல்பத்தரவின் போதைப்பொருள் இரசாயனங்கள் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட தகவல்
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட 20, இரசாயன மாதிரிகளில் 5 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருளின் செறிவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் வெளியிட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
கைது நடவடிக்கை
அதன்படி, குறித்த இராசாயனங்கள் புதைக்கபட்டிருந்த காணி தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள்தாகவும், அவர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக மேற்கு மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஐஸ் என்பது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு போதைப்பொருள் என்றும், இலங்கையில் அதை உற்பத்தி செய்வதற்கான வலுவான முயற்சியை காவல்துறை முறியடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு
மேலும், எதிர்காலத்தில் இந்த உள்ளடக்கங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடகப் பேச்சாளர் வுட்லர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இந்த வெற்றிகரமான சோதனைகள் அனைத்திற்கும் பின்னால் பொதுமக்கள் இருப்பதாகவும், ஒத்துழைப்பவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தொடர்ந்தும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
