ஏறாவூர் நீதிமன்றில் காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு ஓடிய நபர் கைது
மட்டக்களப்பு - ஏறாவூர் நீதிமன்றில் காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்டு ஓடிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியையே குறித்த நபர் பறித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (20.04.2026) முற்பகல் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்புப் பணிகள்
ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் வழமை போன்று பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியை (Handgun) திடீரெனப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

நீதிமன்ற வளாகத்திலேயே இடம்பெற்ற இந்தத் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது.
இதன்போது உடனடியாகச் செயற்பட்ட நீதிமன்றப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் அங்கிருந்த காவல்துறையினர், தப்பியோடிய சந்தேக நபரை நீண்ட தூரம் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதோடு, அவர் தற்போது ஏறாவூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |