உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரணிலின் பொய்யான கருத்துக்களுக்கு வழங்கப்பட்ட பதிலடி!
"தேர்தலை புறக்கணிக்க நிதி வழங்காது சிறிலங்கா அரசாங்கம் செய்த சூழ்ச்சியை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு முறியடித்துள்ளது."
இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ரணிலுக்கு வழங்கப்பட்ட பதிலடி
தொடர்ந்து அவர்,
"தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முடக்குவதை தவிர்த்து விடுவிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளது.
மக்களின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மிகச் சிறந்த தீர்ப்பு இதுவாகும்.
தேர்தலை நடத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிடம் கேட்டதாக அதிபர் ரணில் தெரிவித்த கருத்திற்கு சரியான பதிலடியை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
குறித்த தீர்ப்பின் மூலம் ரணிலின் கருத்துக்கள் யாவும் பொய்யானவை என உறுதியாகியுள்ளது." இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
