எல்லாவற்றிலும் அரசியல் கலப்படம் - ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஏற்பட்ட நிலை! முன்னாள் முதலமைச்சர் கவலை
எங்கும் எதிலும் அரசியல் கலந்திருப்பதே தற்போது எமது சமூகம் அவஸ்தைப்படுவதற்கு காரணமாகும் என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் இறுதிச் சுற்றுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
நாங்கள் எல்லாவற்றிலும் அரசியலை மாத்திரம் மையமாக வைத்து சமூகத் தீர்மானங்களை எடுத்து வந்துள்ளோம். இதுவொரு பாரம்பரியமாக இடம்பெற்று வந்துள்ள நிகழ்வாகும்.
எங்களுடைய சமூக அரசியல் தலைமைகள் இவ்வாறான அரசியல் நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக இப்பொழுது ஒட்டுமொத்த சமூகமும் இந்த சிந்தனைக்குள் அகப்பட்டு அவஸ்தைப்பட வேண்டியுள்ளது.
இதனைப் புரிந்துகொண்டு எங்களை நாங்கள் கண்ணாடியில் பார்த்துப் புடம்வேண்டியுள்ளது. அரசியலை மையமாக வைத்து அனைத்தையும் அணுகும் அசிங்கமான நிலையை மாற்றியமைக்க வேண்டும்.
தேர்தல் முடிந்த கையோடு அரசியலை விட்டு விடவேண்டும். எல்லாவற்றிலும் அரசியலைக் கலப்பதால் ஆன பயன் ஏதுமில்லை.
இது பற்றி ஒட்டு மொத்த சமூகத்திலுள்ள அமைப்புக்களும் தனி நபர்களும் சிந்திக்க வேண்டும் என்றார்.