பூநகரியான் நற்றமிழர் பொன் முருகவேளுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் வாழ்த்து
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மணிவிழாவில் பூநகரியான் நற்றமிழர் பொன் முருகவேளுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் பூநகரி மண்ணில் பிறந்தவரும், புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து மண்ணில் வாழ்ந்துவருமான சுவிட்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர், எழுத்தாளர் ' தமிழ் ஆர்வலர் பூநகரியான்' என அறியப்பட்ட ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேளின் மணிவிழாவினை மணிவிழாக்குழுவும், மணிவிழாமலர்க்குழுவும் இணைந்து பொன்முருகவேள் ஆசானின் மணிவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்ததுடன், மணிவிழா மலரினையும் வெளியிட்டுள்ளனர்.
மணிவிழா மலருக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் தலைநகரில் பேர்ண் வள்ளுவன் பள்ளி என்ற தமிழ்ப்பாடசாலையை 25 ஆண்டுகளுக்கு மேலாக சுவிஸ் நாட்டில், தலைநகர் பேர்ண் கல்வித்திணைக்களத்துடன் இணைந்து சிறப்பாக இயக்கி தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியை ஊட்டுவதற்கு வாழ்த்தினையும் பாராட்டினைத் தெரிவித்ததோடு, பூநகரி மண்ணின் தொன்மை வரலாறு வெளிப்படும் வகையில் பூமியில் ஒரு புதையல் பூநகரி,பூநகரிப்பூங்கா,சுவிற்சர்லாந்தும் தமிழர்களின் குடியேற்றமும் என்ற நுால்களையும் வெளியிட்டு பூநகரிக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ள பெருமகனை அவரின் மணிவிழாவில் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றும் குறி்ப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக பூநகரி பொன்.முருகவேள் ஆசானை பன்னாட்டு தமிழறிஞர்களும் வாழ்த்தியுள்ளார்கள். மணிவிழாமலரானது துாயதமிழில் பிறமொழி எழுத்துக்களோ, சொற்களோ இன்றி இக்காலத்தில் உருவாக்கப்பட்டிருப்பது பொன்.முருகவேளின் தமிழ்மொழி மீதான கொள்கைப்பற்றினை வெளிப்படுத்தியிருப்தோடு, இனிவரும் மணிவிழா மலர்களுக்கு முருகவேளின் மணிவிழா மலர் ஒரு முன்னுவமி( எடுத்துக்காட்டு) என்று மதிப்பிற்குரிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் சிவலிங்கராசா தமது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
தான் யாழில் வாழ்ந்தாலும் பூநகரி பொன்னம்பலம் முருகவேள்நடத்திவரும் சுவிசர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி பற்றி அறிந்துள்ளேன். அவரிடம் கற்ற மாணவர்களை கண்டு பேசியிருக்கின்றேன். அதன்வாயிலாக முருகவேளின் ஆற்றல் பற்றியும் எண்ணிக்கொண்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழ்நாட்டு அறிஞர்களும், ஐரோப்பியநாட்டு தமி ழ்ஆற்றலாளர்களும், கனடா நாட்டு தமிழறிஞர்களும் இவருடைய தமிழப்ணிகள் பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள்.
மணிவிழா மலரானது, வாழ்த்தியல், பதிவியல், பொதுவியல் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்துகள் வாழ்த்தியலாகவும் , முருகவேளுடைய தமிழ்ப்பணிகள், பொதுப்பணிகள், பொதுமக்களுக்கான உதவிகள் தொடர்பான கட்டுரைகள் பதிவியலாகவும், தமிழ்மொழி , தமிழ் இனம் பற்றிய பொதுக்கட்டுரைகள் பொதுவியலாகவும் எடுத்துக்காட்டாக மறைந்த அமரர் வித்துவான் சொக்கன் அவர்களின் இத்தாலி நாட்டில் வாழும் மகள் வாசுகி நடேசன் ஏழு பக்கங்களில் உரைநடைத்தமிழ் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்.
இவ்வாறு பத்துக்கட்டுரைகள் நிறைவாக பொதுவியலாக அமைகப்பட்டுள்ளது. இவ்வாறாக சிறப்பான ஆவணமாக பூநகரியான் மணிவிழா மலர் மணிவிழாவில் வெளியிடப்பட்டுள்ளது.
மணிவிழாத்தொடக்கத்தில் பழச்சாறு கொடுத்து வரவேற்று சந்தணப்பொட்டுகள் இட்டு, மணிவிழா அடையாளங்கள்(சின்னங்கள்) அணிவிக்கப்பட்டு, பல்லக்கில் திருக்குறள் நுாலும் , திருவள்ளவர் உருவமும் முதன்மை விருந்தினர் மலேசியத் தமிழறிஞர் வேர்ச்சொல் ஆய்வாளர் , கலைச்சொல்லாகவாளர் இரா.திருமாவளவன் அவர்களும்,சிறப்பு விருந்தினர்களும் மண்டபவாயிலிருந்து குமரிக்கண்டம் அரங்கிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.
சிறப்பு இருக்கையில் திருக்குறள் நுாலும் திருவள்ளுவர் உருவமும் வைக்கபட்டு, மணிவிழாநாயகர்களின் திருமணத்தில் தமிழிய முறைத்திருமண முறைப்படி மங்கல விளக்கேற்றிய மூன்று பெண்களுமே இங்கு முதலில் விளக்கேற்றினார்கள்,தொடர்ந்து முதன்மை விருந்தினர்,பூநகரி சுவிசு மக்கள் ஒன்றித நிர்வாகிகள் விளக்கேற்றினர்.
அடுத்து மேலும் பலர் விளக்கேற்றி நிகழ்வினைத்தொடக்கிவைத்தனர். அகவணக்கம் செலுத்டலுடன்,திருக்குறள் ஓதி ,தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாடலை வீணையிசையில் ஒலித்தனர் சுவிசு சங்கமம் இசைக்குழுவினர். அதைத்தொடர்ந்து குமாரி .அருளினி .முருகவேளின் அழகுதமிழில் இனிமையான வரவேற்பு உரை இடம்பெற்றதுடன் , சுவிசு சைவநெறிக்கூட இயக்குனர் தி.சிவகீர்த்தி அவர்களின் தொடக்கவுரை சிறப்புரை போன்று சிறப்பாக இடம்பெற்றது.
சைவநெறிக்கூட அருட்சுனையர் சிவரிசி தர்மலிங்கம் சசிகுமார் வாழ்த்துச்செய்தி வழங்கியதுடன்,சைவநெறிக்கூடத்திற்கு வழிகாட்டியாக இருந்துவரும் சுவிட்சர்லாந்து சித்தர் கூட நிறுவனர் யோகன் ஐயாவும்,ஏனைய அருட்சுனையர்களும்,சைவநெறிக்கூடத்தினரும் இணைந்து திருமுறைகள் ஓதி ஆண்டாள்மலை அணிவித்து வாழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து மணிவிழாவின் கருப்பொருள் நிகழ்வான செந்தமிழ் முறையில் மாலைமாற்றும் நிகழ்வு முதன்மை விருந்தினரால் நிகழ்த்தப்பட்டது.
வள்ளலார் அவர்களால் இயற்றப்பட்ட திருவள்ளுவர் பாமாலை ஓதப்பெற்று, திருக்குறளின் இல்லறவியலில் இருந்து மூன்று திருக்குறள்கள் ஓதப்பட்டு மாலைகள் மாற்றப்பட்டது.
இதன்போது மக்கள் தாமக வந்து மாலைகள் அணிந்தும் ,மலர்க்கொத்துகள் கொடுத்தும் வாழ்த்தியும் ,வாழ்துக்கள் பெற்றும் சென்றனர். இதனை மணிவழாநாயகர்களின் 60 ஆண்டுகால தமி்ப்பணியின் அறுவடை இது என்று கூடியிருந்தோர் பேசிக்கொண்டனர்.
தமிழறிஞர் திருமாவளவன் மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் வழியில் தமிழ்மொழி ஆய்வுகளை மேற்கொண்டு புலனம் போன்ற புதிய அறிவியல் சொற்களையும், கலைச்சொற்களையும் உருவாக்கி தமிழுக்கு பலம் சேர்த்திருப்பதால் மணிவிழாவில் அவருக்கு பாவாணர் விருது வழங்கிச்சிறப்பிக்கப்பட்டது இதனை மலேசிய ஊடகங்கள், சுவிசுவாழ்தமிழ் மக்களை பாராட்டிக்கொண்டாடியுள்ளன.
மணிவிழாநாயகர்களின் சமுதாயப்பணிகள்,கல்விப்பணிகள், தமிழ்ப்பணி இவைகளை இணைத்து அருளையா இன்பத்தின் கவிவரிகளில் எழுதப்பெற்ற வாழ்த்துப்பாடலை இளைய தலைமுறையினரின் இசைப்பாடல் நிகழ்வில் இசையுடன் வாழ்த்துப்பாடலாகப்பாடி அவையோரை வியப்பில் ஆழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து மணிவிழாவிற்கு கலசம் வைத்தாற்போல் மணிவிழாமலர் வெளியீட்டினை சுவிட்சர்லாந்து இலக்கிய ஆர்வலர்கள் நிகழ்த்தினர். பலர் வாழ்த்துரைகளை வழங்கியிருந்தனர்.
இதன்போது முதலில் மணிவிழாமலரினை மணிவிழாநாயகர்களான இணையர் முருகவேள் நந்தினி அவர்களிடமிருந்து முதன்மை விருந்தினர் பெற்றுக்கொண்டார், இரண்டாம்மணிவழா மரரினைந சுவிற்சர்லாந்து இம்போட்டாசு வணிகநிறுவன உரிமையாளர் இளையதம்பி சிறீதாசு பெற்றுக்கொண்டார். மூன்றாம் நுாலினை கொலண்நாட்டிலிருந்து வருகைதந்திருந்த முருகவேளின் பெறாமகன் சண்முகரத்தினம் முருகானந்தராயன் பெற்றுக்கொண்டார்.
மணிவிழாவிற்கு வருகைதந்த எல்லோருக்கும் மணிவிழாமலர்கள் வழங்கப்பெற்றதுடன் சிறப்பாக இரவு உணவு விருந்தோம்பலும் இடம்பெற்றது.








