கட்சிக்குள் இருந்து ராஜபக்சர்களுக்கு விசுவாசம்! ரிசாட் அணி எடுத்துள்ள நடவடிக்கை
கொழும்பு துறைமுக நகர வலய பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஏற்கனவே 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் முடிவதற்கு முன்னரே மற்றுமொரு விசாரணையை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கட்சி ஆரம்பித்துள்ளது.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கோட்டாபய - மஹிந்த தலைமயிலான அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பின் போது ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மற்றும் அநுதாரபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் ஆகிய இருவரும் அதனை ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
கடந்த முறை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 20ஆவது திருத்தத்திற்கான வாக்கெடுப்பில் அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் சவாலாக அமைந்த போது இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே மீண்டும் ஒருமுறை இலங்கை அரசாங்கத்திற்கு அவர்கள் ஆதரவாக செயற்பட்ட நிலையில், குறித்த உறுப்பினர்களுக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அக் கட்சியின் சிரேஷ்ட பிரதித்தலைவரான ஷஹீட், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.