கொள்ளையர்களிடம் சிக்குண்டுள்ள இலங்கை!! கறுப்பு பொருளாதார கொள்கைக்கும் சாத்தியம்
இலங்கையின் ஆட்சி கொள்ளையர்களின் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் குழு உறுப்பினருமான சுனில் ஹந்துநெத்தி (Sunil Handunnetti )கூறுகிறார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நேரத்தில் நிதி முகாமைத்துவத்தை அரசாங்கம் எவ்வாறு கையில் எடுக்க முடியுமென கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் உடன்படிக்கை சட்டத்திற்கு முரணானது.
வரவு செலவுத் திட்ட விவாதங்களை நடத்திவிட்டு நிதி அமைச்சர் அவசர ஊடக சந்திப்பை நடத்தி புதிய வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்கின்றார். இவ்வாறு செயற்பட முடியுமா? இவ்வாறு ஆட்சி நடத்துவது சரியா?
கடன் முகாமைத்துவ ஆணைக்குழு ஏன் அமைதியாக உள்ளது. ஆட்சி இன்று கொள்ளையர்கள் கைகளுக்கு சென்றடைந்துள்ளது. பணம் இல்லையென்றால் வளங்கள் விற்கப்படுகின்றன.
நாட்டில் கறுப்பு பொருளாதார கொள்கையொன்று உருவாக்கிக்கொண்டிருக்கிறது. வளங்களை விற்று விற்று இறுதியாக நாடு எங்கு சென்று நிற்கப்போகின்றது என்ற பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் இன்று அரசாங்கத்தின் மீதான அச்சத்தில் உள்ளனர். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக்கொண்டுள்ள நிலையில், மக்களால் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நிலையில் அரசாங்கத்தை எதிர்க் கேள்வி கேட்கவும் மக்கள் அச்சப்படுகின்றனர்” என்றார்.