எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை விரைவில் பரிசீலிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
களுத்துறை - கட்டுகருந்தவில் நேற்றையதினம் (20) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கு சிறிது எடுக்கும் என தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கடனை திறைசேரி உள்வாங்கிய பிறகு எரிபொருளுக்கு ஒரு பாரிய வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
எரிபொருளுக்கு பாரிய வரி
அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திறைசேரி உள்வாங்கியுள்ளதாகவும், அந்தக் கடனை வசூலிப்பதாற்காகவே எரிபொருளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், கடனை அடைக்கும் வரையில் எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்காக கடன் செலுத்தும் காலத்தை விரைவில் நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க நிதி அமைச்சு, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |