மின் நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கமும் காரணம் - எதிரணி எம்.பி குற்றச்சாட்டு
நல்லாட்சி அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க தவறியமையே தற்போதைய மின் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் தற்போதைய அரசாங்கம் புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவவில்லை.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லாத காரணத்தினாலேயே போக்குவரத்து மற்றும் மின்சாரத்துக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் பறித்துள்ளது.
நீர் மின் நிலையங்கள் மூலம் 1,383 மெகாவோட் மின்சாரத்தையும் அனல் மின் நிலையங்கள் மூலம் 1,554 மற்றும் வெஸ்ட் கோஸ்ட் அனல்மின் நிலையம் உட்பட தனியார் துறை மூலம் 614 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் இலங்கை மின்சார சபைக்கு போதுமானதாக உள்ளது.
மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தார். ஆனால், மின் உற்பத்தி முறைகள் தொடர்பில் அவருக்கு தெரியாது.
அரசாங்கத்தின் நிதி முறைகேடு காரணமாக ஏற்பட்டுள்ள டொலர் கையிருப்பு பற்றாக்குறையே பிரதான காரணம்.
நாட்டின் இன்றைய நிலைக்கு அரச தலைவர், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.