நாளாந்தம் நடைமுறைக்கு வரவுள்ள மின்வெட்டு - வெளிவந்த புதிய தகவல்
நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளை அமுல்படுத்துமாறு இலங்கை மின்சார சபை (CEB) மின்சக்தி அமைச்சுக்கு பரிந்துரைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
“மின்சாரசபையின் கூடுதல் பொது மேலாளர் P.W. ஹெந்தஹேவா இந்த தீர்மானத்தை மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவுக்கு அறிவித்து உடனடியாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க, அதே காலத்திற்கு திட்டமிடப்படாத மின்வெட்டுகள் அமுல்படுத்தப்படும் என்று குறித்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
மின்சாரசபையின் மூத்த அதிகாரியொருவரின் கூற்றுப்படி, முற்பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அதிக நேரம் இருக்கும் போது இரண்டு 45 நிமிட நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
டொலர் நெருக்கடி காரணமாக அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு மற்றும் கெரவலப்பிட்டி யுகதனவி ஆலையின் ஒரு பகுதி பராமரிப்புக்காக மூடப்பட்டமை மற்றும் களனி திஸ்ஸ 115 மெகாவாட் எரிவாயு விசையாழி ஆலையில் ஏற்பட்ட பழுதினால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.