நள்ளிரவை தாண்டியும் தொடரவுள்ள மின்வெட்டு -மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கடுமையான வறட்சி மற்றும் எரிபொருளுக்கான பாரிய தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
முதலில் ஆறு மணிநேரமாக இருந்த மின்வெட்டு பின்னர் ஏழு மணிநேரமாக மாறி தற்போது 10 மணித்தியாலங்களாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் திட்டமிடப்பட்ட மின்துண்டிப்பு மேலும் பல மணித்தியாலங்களுக்கு நீடிக்கக்கூடும் என மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (30) நள்ளிரவை தாண்டியும் நாளை (31) அதிகாலை வரை மேலும் பல மணிநேரத்துக்கு இந்த மின்துண்டிப்பு தொடரக்கூடும் என குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வறட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
