அரச தலைவர் கோட்டாபயவுக்கு புகழாரம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் எதிர்காலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது நாட்டு மக்கள் அனைவரினதும் கடமை என ராஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக்க தேரர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றி மக்கள் உயிர்வாழும் சுதந்திரத்தை இருமுறை அரச தலைவர் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“அரச தலைவர் மிரிசவெட்டிய விஹாராதிகாரி தேரரைச் சந்தித்து கலந்துரையாடிய போது, இலங்கை பெரும் கடன் சுமையை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்கள் சுதந்திரமாக வாழ வாய்ப்பளித்திருப்பது, ஏனைய உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்க்கை முறையைக் கொண்டுசெல்வதற்கு அரச தலைவரின் வேலைத்திட்டங்கள் ஆத்ம சக்தியாக அமைந்துள்ளன.
நாட்டை மீண்டும் மூடுவதற்கு இடமளிக்காமல் சுய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் பொருளாதாரத்தை நிர்வகித்துக்கொண்டு தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்காக அரச தலைவரால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரதும் கடமையும் பொறுப்புமாகும்” என எடுத்துரைத்துள்ளார்.