போதி மரத்தை பாதுகாக்கும் புண்ணிய நிகழ்வில் மஹிந்தாவைப் புகழ்ந்த தேரர்!
வரலாற்று சிறப்புமிக்க பெல்லன்வில போதி மரத்தை பாதுகாக்கும் புண்ணிய நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் போதி சுவர் புனரமைப்பிற்கான அடிக்கல்லை பிரதமர் தனது கரங்களினால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்க்ஷவிடம் வழங்கி அடிக்கல் நாட்டும் பணியை அவரிடம் ஒப்படைத்தார்.
அதற்கமைய பெல்லன்வில போதி மரத்தை பாதுகாக்கும் நடவடிக்கை சுபவேளையில் ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த புண்ணிய நிகழ்வை நாட்டில் யுத்தத்தை நிறைவுசெய்து சமாதானத்தை ஏற்படுத்திய தலைவரின் கரங்களினால் ஆரம்பிக்க கிடைத்தமையை ஒரு பாக்கியமாக கருதுவதாக பெல்லன்வில ரஜமஹா விகாராதிபதி கலாநிதி பெல்லன்வில தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இதன்போது அனுசாசனம் நிகழ்த்திய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் அனுநாயக்கர் பேராசிரியர் கொடபிடியே ராஹுல தேரர், சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு தைரியமான தலைவரான மஹிந்த ராஜபக்க்ஷ யார் என்ன கூறினாலும் நாட்டிற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை அவரது எண்ணத்திற்கமைய முன்நோக்கி கொண்டு செல்வதற்கு மஹாசங்கத்தினரின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.








