பிரசன்ன ரணதுங்கவுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை எச்சரிக்கை! நீதிமன்றின் அதிரடி உத்தரவு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிராக, நிலம் ஒன்றை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட 100 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, 2027 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாக செலுத்த வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ், பிரதிவாதிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரசன்ன ரணதுங்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நீதிமன்றம் நிர்ணயித்த காலவரையறைக்குள் இழப்பீட்டுத் தொகையை முழுமையாகச் செலுத்துவதாக உறுதியளித்தனர்.
குற்றவாளியாக பிரசன்ன ரணதுங்க
அந்த உறுதிமொழியைப் பரிசீலித்த நீதிமன்றம், அவரை விடுவிக்க உத்தரவிட்டது. மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில், கொலன்னாவை மீதொட்டமுல்ல பகுதியில் அமைந்திருந்த நிலம் ஒன்றை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக, தொழிலதிபர் ஒருவரிடம் 640 இலட்சம் ரூபாய் பணம் கோரி அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் பிரசன்ன ரணதுங்க குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அந்தக் குற்றத்திற்காக, முன்னதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு 250 இலட்சம் ரூபாய் அபராதமும், 100 இலட்சம் ரூபாய் இழப்பீடும் செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இலங்கை அரகலய சதுரங்கத்தில் மகிந்தவின் அரசியலை உருமாற்றிய 121 நாட்கள் 6 மணி நேரம் முன்