மட்டக்களப்பில் அகற்றப்பட்ட ஜனாதிபதியின் விளம்பர பதாகைகள்
மட்டக்களப்பில் (Batticaloa) தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) விளம்பர பதாகைகள் காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளன.
நேற்றிரவு (09.04.2025) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், அநுரகுமார திசாநாயக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12.04.2025) மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய உள்ளார்.
காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகள்
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது வருகையை அறிவிக்கும் பதாகைகள் கட்சியினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இவை தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என மாவட்ட தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கு முறைப்பாடு கிடைத்தது.
இதனையடுத்து நேற்றிரவு மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.சுபியான் தலைமையில் காவல்துறையினரினால் பதாகைகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் மாவட்ட செயலக தேர்தல் கண்காணிப்பு குழு உயர் அதிகாரிகளும் இதன் போது பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



