இவ்வாண்டின் இறுதிக்குள் சம்பள உயர்வு நிச்சயம் : உறுதியளிக்கும் ஜனாதிபதி!
இவ்வாண்டின் இறுதிக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
மலையக சமூகத்தினருக்கு இன்று வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சம உரிமை
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “மலையக மக்களும் சம உரிமையுடைய பிரஜைகள் மலையக மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வழிவகைகள் மற்றும் அவர்களுக்கு நிம்மதியானதொரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும் பாரிய கட்டுப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தோட்டங்களை சூழ உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பது தொடர்பிலும், சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மலையக மக்களுக்குரிய சமூக அந்தஸ்த்து, கலாசார உரிமை, அவர்களுக்குரிய உரிமை என்பன காக்கப்படும்.மலையக மக்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தனர். அவர்கள் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல. அவர்களுக்கும் சம உரிமை உண்டு.
எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நாம் காப்பாற்றுவோம்.
வீட்டு உரிமை பத்திரங்கள்
மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12.10.2025) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
அதன்படி, குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படவுள்ளது.
நிகழ்வை நேரடியாக காண......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
