ரணிலுக்கு கால அவகாசம் தேவை! தேர்தலை ஓராண்டு தள்ளி வையுங்கள்: பிரசன்ன ரணதுங்க
'நாட்டைக் கட்டியெழுப்ப வேறு யாரும் இல்லை.அதனால் தேர்தலை ஓராண்டு தள்ளி வைக்கலாம்' என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த நேரத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப வேறு யாரும் இல்லை. அதுதான் உண்மை, அதனால், அடுத்த தேர்தலை ஓராண்டுக்கு தள்ளி வைத்து, இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டுக் கொண்டுவருவதற்கு அவருக்கு மீண்டும் வர கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ரணிலுக்கு கால அவகாசம்
ஆனால் அரசியலமைப்பை மாற்ற முடியாத காரணத்தினால், தற்போதைய அதிபர் ரணிலுக்கு மேலும் ஒரு காலஅவகாசம் வழங்கப்பட வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
இது தொடர்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களை எடுத்துப் பார்த்தால் நன்றாகத் தெரியும். அனுரகுமார திஸாநாயக்க 'திருடர் திருடர்' எனப் பேசிக்கொண்டிருக்கின்றாரே தவிர பொருளாதார மறுசீரமைப்புக்களை கொண்டு வரமாட்டார்.
ஆனால் அதைவிட தகுதியானவர் யாராவது இருந்தால் எனக்குக் காட்டுங்கள். தற்போதைய அதிபர் ரணில் நாட்டுக்காகப் பல விடயங்களைச் செய்துள்ளபோதும் இந்தப் பணிகள் அனைத்தும் பூரணமாக முடிவுக்கு வரவில்லை. இதற்கு நாம் அவகாசம் வழங்க வேண்டும் ” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |