மீண்டும் அதிபராகின்றார் ஜிம்பாப்வேவின் அதிபர் எம்மர்சன் மங்காக்வா
ஜிம்பாப்வேவின் அதிபர் தேர்தலில் மீண்டும் எம்மர்சன் மங்காக்வா (Emmerson Mnangagwa) வெற்றிபெற்றுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது ,
ஜிம்பாப்வேவில் கடந்த 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எம்மர்சன் மங்காக்வாவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா போட்டியிட்டிருந்தார்.
குறித்த தேர்தலின் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம்(26) நள்ளிரவு வெளியிட்டது.
இதில் தற்போதைய அதிபான எம்மர்சன் மங்காக்வா 52.6 சதவீத வாக்குகளையும் எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
இதன் மூலம் எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவின் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளை ஏற்க எதிர்க்கட்சி மறுப்பு
இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சி ஏற்க மறுத்துள்ளது. அவசரமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதை நாங்கள் நிராகரிக்கிறோம் என எதிர்க்கட்சியின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராபர்ட் முகாபே அரசு இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து இடைக் கால அதிபராகத் எம்மர்சன் மங்காக்வா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிபர் தேர்தலில் எம்மர்சன் மங்காக்வா வெற்றி பெற்று அதிபராகக் கடமைகளை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.