மொட்டின் அடுத்த அதிபர் வேட்பாளர் ரணில் - மறைமுகமாகக் கூறும் பசில்!
"தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிபராக வரவேண்டும் என்பது இவ்வாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பமாக உள்ளது."
இவ்வாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் மொட்டுக்கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கியபோதே பசில் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மொட்டு வேட்பாளர் - ரணில்

மேலும் அவர்,
"அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர், இருப்பினும் எமது கட்சி இது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை.
அதிபர் தேர்தல் தொடர்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை, ஆகவே இது தொடர்பில் இப்போது முடிவெடுக்கத் தேவையில்லை.
அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார்.
தற்போதைய நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சிறந்த தலைவர், அதனால் அவரை அடுத்த அதிபர் தேர்தலில் களமிறக்குவதற்கு மொட்டுக்கட்சியில் உள்ள பலரும் விரும்புகின்றனர்." இவ்வாறு பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.