மீண்டும் ஜனாதிபதி பொது மன்னிப்பு! மைத்திரியின் கால நடைமுறை தவறு என்கிறார் ஞானசார தேரர்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கலந்துரையாடி தமக்காக மீண்டும் ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்றுத் தருமாறு மகா சங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பை நடைமுறைப்படுத்தியபோது அதிகாரிகளால் ஏற்பட்ட நிர்வாகத் தவறுகளைத் திருத்தி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
நீதிமன்ற உத்தரவு
“தமக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பை செல்லுபடியற்றதாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான் சட்டத்திற்கு தலைவணங்குகிறேன். புத்தரின் போதனைகளுக்கும் நாட்டின் சட்டத்திற்கும் அமைவாக தான் சட்டத்திற்கு தலைவணங்குகின்றேன்.
எனினும், தமக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டபோது நடைமுறை ரீதியாக ஏதேனும் தவறு இடம்பெற்றிருந்தால், அதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையே சாரும்.
அந்தத் தவறுக்காக தம்மை தண்டிப்பது நியாயமற்றது. முன்னாள் ஜனாதிபதியாலோ அல்லது அதிகாரிகளாலோ தவறு இடம்பெற்றிருந்தால், தற்போதைய ஜனாதிபதியால் அதனைச் சரிசெய்ய முடியும்.
எனவே, உரிய நடைமுறைக்கு அமைய எனக்கு மீண்டும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.
மீண்டும் சிறையில் அடைக்கப்படுவதற்கு தாம் அஞ்சவில்லை. எனினும், இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் நாடு மற்றும் பௌத்த சாசனத்திற்காக குரல் கொடுக்கும் இளம் பிக்குகள் கடுமையாக விரக்தியடையக்கூடும்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |