சிதையப்போகும் எரிவாயு சந்தை - அமெரிக்காவின் உத்தரவை எதிர்த்த இந்தியா
ரஸ்யா எரிவாயு குறித்த ஜி7 நாடுகளின் முடிவுகளை ஏற்கமாட்டோம் என தெரிவித்த இந்தியாவின் முடிவை ரஸ்யா வரவேற்றுள்ளது.
உலக நாடுகள் பொருளாதார சரிவிலிருந்து மீள, உக்ரைன் – ரஸ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை உலக நாடுகளின் தலைவர்கள் எடுத்து வருகிறார்கள்.
அதேவேளை ரஸ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.
ஜி-7 கூட்டணி

அதன் ஒரு பகுதியாக, ரஸ்யாவின் வருவாயை மட்டுப்படுத்த, ரஸ்யா கச்சா எண்ணெய்யின் விலையை ஒரு பீப்பாய் 60 டொலராகக் குறைக்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஜி-7 நாடுகளின் கூட்டணி நேற்று ஒப்புக்கொண்டது.
இதனால் ரஸ்யாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்க கூடிய கச்சா எண்ணெய் விலையை குறைத்ததால், வருவாய் கணிசமாக குறையும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை.
இந்தநிலையில் மேற்கத்திய நாடுகளின் இந்த புதிய அறிவிப்புக்கு ரஸ்யா வழக்கம் போல் எதிர்வினை ஆற்றியுள்ளது.
இந்தியா நிராகரிப்பு

இது தொடர்பாக ரஸ்யா அதிபர் புடின் மற்றும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், “விலை கட்டுப்பாடு விதிக்கும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மாட்டோம்.ஜி7 நாடுகளின் முடிவானது, இலவச சந்தை கொள்கையை மாற்றியமைக்கும் வகையில் உள்ளது.” என கூறி உள்ளது.
இந்தநிலையில் ரஸ்யா எரிவாயு குறித்த ஜி7 நாடுகளின் முடிவுகளை ஏற்கமாட்டோம் என தெரிவித்த இந்தியாவின் முடிவை ரஸ்யா வரவேற்றுள்ளது. இது குறித்து ரஸ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் கூறும்போது, ‘‘ கடந்த 5ம் திகதி ஜி7 நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஸ்யா எரிவாயு விலை உச்சவரம்பை இந்தியா நிராகரித்துள்ளது வரவேற்கதக்கது.
எரிவாயு விலை உச்ச வரம்பு என்பது சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது உலகளாவிய விற்பனை சங்கிலிகளை உடைக்கும். மேலும் எரிவாயு சந்தையை முற்றிலுமாக சிதைக்கும் என தெரிவித்துள்ளார்.