பெயர் வெளியிடப்படாமல் தடுத்து வைக்கப்பட்டவர்கள் எங்கே? ராஜபக்ச தரப்பிடம் கேள்வி
இலங்கை அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியுமாயின், ஆட்சியாளர்களால் ஏன் அவர்களை முழுமையாக விடுவிக்க முடியாதுள்ளது என ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோன்று ரகசிய தடுப்பு முகாம்கள் இருந்ததை ஏற்றுக் கொண்டுள்ள இந்த ஆட்சியாளர்கள், பெயர் வெளியிடப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்போது, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போதும், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அனந்தி சசிதரன், இது மனித உரிமை மீறல் செயற்பாடு என்றாலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.