யாழில் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு எதிராக மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் (Jaffna) - இணுவிலில் (Inuvil) அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் (Nallur Pradesa Sabha) குப்பை கிடங்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பினால் அதனை சூழவுள்ள கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கோரி இன்று (07) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாக இணுவில் காரைக்கால் அம்மன் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான குப்பைகளை கொட்டும் பகுதியில் மலை போல் குப்பைகளை குவித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
குவிக்கப்படும் கழிவுகளினுள் மருத்துவக் கழிவுகள், கால்நடைகளின் கழிவுகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு எரிப்பதன் ஊடாக அயலிலுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
தீ விபத்தால் அசௌகரியம்
இதேவேளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவும் குறித்த குப்பைகளில் தீப் பரவல் ஏற்பட்டு சுற்றுச்சூழலில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நேற்றைய தினமும் (06) ஏற்பட்ட தீ விபத்தால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் குறிப்பிட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் இங்கு பணி புரிபவர்கள் பணத்தைப் பெற்று வேறு பகுதிகளில் உள்ள பொது குப்பைக் கழிவுகளையும் இங்கே போடுவதற்கு அனுமதி வழங்குவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நல்லூர் பிரதேச சபை
எனவே இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது பல்வேறு பதாதைகளைத் தாங்கியவண்ணம் கோஷம் எழுப்பியவாறு பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |