திருமலையில் காணி விடுவிப்பு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
திருகோணமலை (Trincomalee) - சம்பூர் பகுதியில் அரச பொறிமுறைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (04) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சம்பூர் சூரிய மின் சக்தி நிலையம், விதுர கடற்படை முகாமுக்காக சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் ,2007 ஆம் ஆண்டு அரச உடமையாக்கப்பட்ட காணிக்கான உரித்துடைமையை மக்களுக்கு வழங்குமாறு கோரி இந்த போராட்டம் இடம்பெற்றது.
மகஜர் கையளிப்பு
இதன்போது “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்“, “பறிக்காதே பறிக்காதே வாழ்வாதார நிலங்களை பறிக்காதே“, “சம்பூர் விதுர கடற்படை சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீள கையளியுங்கள்“ உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று கிழக்கு மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தரிடம் மகஜர் ஒன்றினை கையளித்த பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



