போராட்டக்களத்திலிருந்து வௌியேறாதோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை! சேகரிக்கப்பட்ட விபரங்கள்
பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து செல்லாத நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுவதற்காக பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று இரவு பல்பலைக்கழக நிர்வாகத்தினால் இடித்தழிக்கப்பட்டது. அதனையறிந்த மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர்கள் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த சென்றிருற்தனர்.
அதனையடுத்து இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு வளாகத்திற்குள் நுழைவது தடைசெய்யப்பட்டிருந்தது. அதனையடுத்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
அத்துடன் இன்று காலை மாணவர் ஒன்றியத்தினருக்கும் துணைவேந்தருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதனையடுத்து மாணவர்கள் உடனடியாக அவ்விடத்தைவிட்டு கலைந்து செல்லாவிட்டால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு சுகாதார நடவடிக்கைகளுக்கமைய 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சுகாதாரப் பிரிவினராலும் பொலிஸாராலும் அறிவிக்கப்பட்டதையடுத்து சமூக அக்கறையுடன் தமது போராட்டத்தை இடை நிறுத்துவதாக மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்தல் விடுத்திருந்தாலும் சில மாணவர்கள் உண்ணா விரத போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே போராட்ட இடத்திலிருந்த வெளியேறாதவர்களின் விபரங்கள் பொலிஸாரால் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.