ட்ரம்புக்கு எதிராக திரும்பிய எலோன் மஸ்க்
அமெரிக்காவின் (America) வர்த்தக பங்காளிகள் மீது ட்ரம்ப் (Donald Trump) நிர்வாகம் வரிகளை அறிவித்துள்ள நிலையில், முதல் முறையாக ஐரோப்பாவுக்கு ஆதரவாக ட்ரம்புக்கு எதிராக எலோன் மஸ்க் (Elon Musk) கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வரிகளே இல்லாத வர்த்தகம் சாத்தியமாக வேண்டும் என தாம் விரும்புவதாக எலோன் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தேவையில்லாமல் செலவு செய்வதை கண்டறிந்து அதை தடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
வரி இல்லாத சூழல்
இந்த நிலையில், இத்தாலியின் தீவிர வலதுசாரி கட்சி ஒன்றின் தலைவர்களுடன் காணொளி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட எலோன் மஸ்க், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வரி இல்லாத சூழல் உருவாக வேண்டும் என்றும், வெளிப்படையான வர்த்தகம் சாத்தியமாக வேண்டும் என்றும் தாம் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் மிக அதிகமாக வர்த்தக உறவு கொண்டிருக்கும் இத்தாலிக்கும் 20 சதவீத வரியை ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் 20 சதவீத வரி என்பது ட்ரம்பால் பொதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் வேலை
இதனிடையே, ஐரோப்பாவில் தமது டெஸ்லா நிறுவன வாகனங்களின் விற்பனை கடுமையாக சரிவடைந்து வரும் நிலையிலும், ஐரோப்பா முழுவதும் செயல்படும் தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் தமது ஆதரவு எப்போதும் இருக்கும் என அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
மஸ்கின் தீவிர வலதுசாரி ஆதரவு நிலையே, அவரது டெஸ்லா வாகன விற்பனைக்கு சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு, மக்கள் ஐரோப்பாவில் வேலை செய்ய விரும்பினால் அல்லது வட அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பினால் அவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
முன்வைக்கும் ஆலோசனை
இதுவே, ட்ரம்புக்கு தாம் முன்வைக்கும் ஆலோசனை என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தீவிர வலதுசாரி கட்சிக்கும் இன்னொரு வலதுசாரி அமைப்பான Lega Nord கட்சிக்கும் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளும் தீவிர வலதுசாரி கொள்கைகளை கொண்டுள்ளவை என்பதுடன், சட்ட ஒழுங்கு, வரி குறைப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை ஒடுக்குதல் உள்ளிட்டவையில் ஒரே கருத்துடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
