அமைச்சர் டக்ளஸிடம் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கோரிக்கை
ஆசிரியர்கள் தமது உரிமைக்காக போராடும் சமயம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் (K. Thileepan) தெரிவித்த கருத்தானது, தங்கள் கட்சியின் கருத்தா என்பதை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) பகிரங்கமாக கூற வேண்டும் என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் யோசப் ஸ்டாலின் (Josap Stalin) கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிபர்கள், ஆசிரியர்கள் தமது கோரிக்கைகளை முன் வைத்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நேரம் பாடசாலைகளின் திறப்பை வலயத்தில் ஒப்படையுங்கள் என திலீபன் வீடியோ மூலம் கருத்து தெரிவித்திருப்பதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இவ்வாறு அரசிற்கு எதிரான ஓர் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை தொடர்பில், ஆராய வேண்டிய அரசியல் கட்சி அதனை மலினப்படுத்தும் கருத்தை முன் வைத்துள்ளது.
எனவே இந்தக் கருத்தை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இந்தப் பிழையான நிலைப்பாடு தான் ஈ.பீ.டீ.பியின் கருத்தா என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக கூற வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.