தந்தையை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான நகர சபை உறுப்பினர்- தற்போது வெளியாகியுள்ள தகவல்!
தந்தையை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளம் நகர சபை உறுப்பினர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட பிரச்சினை காரணமாக புத்தளம் நகர சபை உறுப்பினர், 70 வயதுடைய தனது தந்தை மீது தாக்குதல் நடத்தியதாக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் நேற்று பதிவு செய்த முறைப்பாட்டுக்கு அமைய 40 வயதான குறித்த நகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரான நகர சபை உறுப்பினரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த புத்தளம் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில், முறைப்பாட்டாளரான நகர சபை உறுப்பினரின் தந்தை, இன்று காலை பொலிஸ் நிலையம் சென்று தான் செய்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றார்.
இதனையடுத்தே, கைது செய்யப்பட்ட புத்தளம் நகர சபை உறுப்பினர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.