நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை
அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (20) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாலை வேளைகளில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
காலி, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலையாக 12°C
அதேவேளை, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என கூறப்படுகிறது.

நாளைய தினம் அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 33°C பதிவாகும் எனவும், நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12°C பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |