சிறிலங்காவை ஆபத்துக்குள் தள்ளிவிட்டுள்ள ராஜபக்சாக்கள்
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயம் கொண்டுவருவதற்கு காரணம் ராஜபக்சாக்களின் அரசாங்கத்தில் இருக்கும் ஊழல்வாதிகளையும் திருடர்களையும் காப்பாற்றுவதற்கே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல (J.C. Alawathuwala) எச்சரித்துள்ளார்.
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் (Gotabaya Rajapaksa) “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற இலக்கை எட்டுவதற்கு அமைக்கப்பட்ட செயலணியானது நாட்டிற்கு ஆபத்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய பாதுகாப்புக் குறித்து கூக்குரல் இடும் ராஜபக்ச அரசாங்கம் இன்று சீனாவிற்கு அடிபணிந்துள்ளது. சீனாவின் வலுக்கட்டாயத்தினால், திருப்பி அனுப்பப்பட்ட சேதன பசளை கப்பலை மீண்டும் நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இவர்கள் முயற்சிக்கிறார்கள்.
இராஜாங்க அமைச்சர் சீனத் தூதுவரின் இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது முறையான செயற்பாடல்ல. ராஜபக்ச அரசாங்கம் இதனையிட்டு வெட்கமடைய வேண்டும்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற விடயம் கொண்டுவருவதற்கு காரணம், ராஜபக்சாக்களின் அரசாங்கத்தில் இருக்கும் ஊழல்வாதிகளையும் திருடர்களையும் காப்பாற்றுவதற்கே. அவர்கள் மீது பல வழக்குகள் இருக்கின்றன.
அவற்றினை அகற்றுவதற்கு தான் இந்த நடவடிக்கை. ஏற்கனவே பல வழக்குகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் அப்படி இருக்க முடியாது. சாதாரண மக்களைத் தான் நீதி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இது நாட்டிற்கு மிகவும் ஆபத்தான நகர்வு. 19ஆவது திருத்தச் சட்டம் அகற்றப்பட்டு 20ஆவது திருத்தம் கொண்டுவந்த போதே நாம் எண்ணியிருந்தோம் இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று. கடைசியில் அதுவும் நடந்து விட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.