ராஜபக்ச அரசாங்கம் உண்மைத் தன்மையுடன் இல்லை - எதிரணி எம்.பி குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் உண்மைத் தன்மையுடன் நடந்து கொள்ளத் தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல (Lakshman Kiriella), உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையை அரசாங்கம் ஒருபோதும் நிறைவேற்றாது எனக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்த்தன ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடருமாறு கொழும்பு பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார்.
ஆனால் கோட்டாபய அரசாங்கம் இதனைச் செய்யாது. கோட்டாபய ராஜபக்ச தேர்தலுக்கு முன்னர், அரச தலைவர் ஆணைக்குழுவின் சிபார்சுகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்ததாக கர்தினல் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஆனால் வெற்றி பெற்ற பின்னர் கோட்டாபய, அவ்வாறு அரச தலைவர் ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தினால் தனக்கான மக்கள் செல்வாக்கு குறையும் எனத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் நாட்டில் நீதியை வழங்குவது அரச தலைவர் அல்ல மாறாக நீதிபதிகளே. அதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். யாருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்ம் என்பதை தெரிவு செய்யும் உரிமை அரச தலைவருக்கு இல்லை, அது நீதிபதிகளிடம் தான் இருக்கின்றது.
தற்போது சிலரைக் காப்பாற்றவும், சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அரச தலைவர் ஆணைக்குழுவின் அறிக்கையினை இந்த அரசாங்கம் நிறைவேற்றாது என்பதே யதார்த்தம்” என்றார்.