ஊழல்வாதிகளை காப்பாற்ற திட்டமிடும் ரணில்: அரசாங்கத்தை திசை திருப்ப சதி...!
எதிர்காலத்தில் கைது செய்யப்படவுள்ள மற்றும் தண்டனைப் பெறவுள்ள ஊழல்மிக்க எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை காப்பாற்றுவதற்காகவே ரணில் விக்ரமசிங்க பொருளாதார பீதியை உருவாக்கி மீண்டும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிக்க முயற்சிக்கின்றார் என்று ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்த தெளிவான பார்வையும் திட்டமும் உள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை
2028 ஆம் ஆண்டளவில் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் 15 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கையிருப்பு இலக்கை அடைந்து நாட்டை மீண்டும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கொண்டு செல்ல இந்த அரசாங்கத்தால் முடியும்.

2028 ஆம் ஆண்டில் கடன் மீளச்செலுத்த தொடங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புகளின்படி நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என்றும் தற்போதைய இலங்கை மத்திய வங்கியின் கணிப்புகளின்படி இந்த ஆண்டின் இறுதியில் கையிருப்பு 8 பில்லியன் டொலர்களாக மட்டுமே இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.
இதன் மூலம் 2027 மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் நிதி நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் அதனால் அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தாமல் அந்நிய செலாவணியை பெருக்குவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூற முற்படுகிறார்.
பொருளாதார ஆலோசகர்
இருப்பினும், ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பொருளாதார ஆலோசகராக மாற முயல்வதும் அவரே பொருளாதாரத்தை மீட்டெடுத்தார் என்று பரப்புவதும் ஒரு கட்டுக்கதையாகும்.
2015 நல்லாட்சி காலத்திலிருந்தே ரணில் விக்ரமசிங்க பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளே நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியையும் மக்கள் போராட்டத்தையும் உருவாக்க வழிவகுத்தன.

மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்புக் கூற வேண்டிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொருளாதாரம் குறித்த சரியான புரிதல் எதுவும் இல்லை.
அவர் எப்போதும் தீவிர நவதாராளவாத கொள்கைகளின் மூலம் மக்கள் மீது அதிக வரிகளைய சுமத்தி பொதுச் சொத்துக்களைய தனியார்மயப்படுத்தி மக்களை துன்புறுத்தினார்.
மக்களின் அரகலய போராட்டத்துக்குப் பின்னரும் ரணில் விக்ரமசிங்க செய்தது ராஜபக்சர்கள் உள்ளிட்ட ஊழல்வாதிகளை பாதுகாத்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு சென்றதல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |