தமிழர்களின் வாக்குகளை கவர ரணில் முயற்சி! குற்றம் சாட்டும் சிங்கள எம்.பி
இலங்கையில் உள்ள சிறுபான்மை இன மக்களின் வாக்குகளை கவர தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக சுதந்திர மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் (G.L Peiris) குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னெடுக்கும் பேச்சுக்கள், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான திட்டம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்ததாக ஜி.எல். பீரிஸ் நினைவூட்டியுள்ளார்.
நேர்மையற்ற நடவடிக்கைகள்
எனினும், இந்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை இதுவரை காணக்கூடியதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் நேர்மையானவை அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ”தேர்தலை முதன்மையாக கொண்டு பல சட்டவிரோத நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தவறான முயற்சிகள்
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் பல புதிய திட்டங்களை ஆரம்பித்திருந்தது.
எனினும், அவை மக்களை தவறாக வழிநடத்துவதற்காக தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்.
தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்ட தீர்மானம் இதற்கான சிறந்த உதாரணம்” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |