கோட்டாபயவை இலக்கு வைக்கும் ரணில் தரப்பு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றியதன் பின்னர், சபை ஒத்திவைப்பு விவாதம் ஒன்று நடத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அரச தலைவரின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டுமென முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கோரியுள்ளார்.
சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த விடயமானது 1978 அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து நாட்டில் பின்பற்றும் நடைமுறையாகும் என அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் மூலம், தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், அரச தலைவர் ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் 2021, டிசம்பர் 12 நள்ளிரவு நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.
இதற்கமைய நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கூடவுள்ளது.
இந்தநிலையில், அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இந்த ஒத்திவைப்பு விவாதத்தை ஜனவரி 19, 20 மற்றும் தேவைப்பட்டால் 21ஆம் திகதியும் நடத்துவதற்கு நேரம் ஒதுக்குமாறு சபாநாயகரிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.