சமூக வலைத்தளங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை : ஆஷு மாரசிங்க
உலக அரசியலுடன் இணைந்து செல்லக்கூடிய ஒரு தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாரும் இலங்கையில் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுக்கொள்கைக்கு தற்போது பலன் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.
ஒரே தலைவர்
அதிபர் மேற்கொண்டு சென்ற வெளிநாடுகளில் அங்குள்ள தலைவர்கள் அதிபர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன் நாட்டுக்கு உதவி செய்யவும் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.
கியுபாவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்த கிடைத்தமை எமக்கு பெரும் கெளரவமாகும்.
கியுபா சோசலிச நாடாகும். அவ்வாறு இருந்தும் எமது நாட்டு தலைவருக்கும் அந்த மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்த கிடைத்தமை எமது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை எந்த நாட்டையும் சார்த்ததாக இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதேபோன்று அடுத்ததாக அதிபர் ஜேர்மன் நாட்டுக்கு செல்ல தயாராக வருகிறார். அங்கு அந்நாட்டு அதிபர் உட்பட தலைவர்களை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார்.
இதன்போது நாட்டுக்கு தேவையான உதவிகளையும் பெற்றுக்கொள்ள அதிபர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இவ்வாறு வெளிநாட்டு தலைவர்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் எமது தேவைகளை சொல்ல முடியுமான ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பது யாரும் அறிந்த விடயமாகும்.
அத்துடன், அரசியல் அனுபவம் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியுமான இலங்கையில் இருக்கும் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கவாகும்.
மேலும் நாட்டை அபிவருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சர்வதேச உதவிகள் கிடைக்க ஆரம்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதனை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம்
குறிப்பாக சமூகவலைத்தளங்களை அடக்கி, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நிகழ்நிலை காப்பு சட்டமூலம் ஊடாக நடவடிக்கை எடுத்து வருவதாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
அவர்களின் கருத்துக்களில் எந்த உண்மையும் இல்லை. மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திசை திருப்பவே இவ்வாறு செயற்படுகின்றனர்.
சமூக வலைத்தளங்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வாறு செய்யவும் முடியாது.
ஆனால் சமூகவலைத்தலங்கள் ஊடாக சமூக விராரேத செயற்பாடுகள் இடம்பெறுவது, இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தூண்டும் விடயங்களை பகிர்வதை தடுப்பதற்கு முடியுமான ஒழுங்குவிதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கான நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் சமூகவலைத்தலங்களை அடக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.
அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கமையவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சட்டமூலங்கள் தயாரிக்கப்பட முன்னர் இதுதொடர்பாக அனைத்து தரப்பினர்களதும் ஆலோசனைகள் பெறப்பட்டிருக்கின்றன, அந்த ஆலோசனைகளுக்கமையவே நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.” என்றார்.