ஐ.நாவின் 78ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள ரணில் விக்ரமசிங்க
''நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல்'' என்ற தொனிப்பொருளின் கீழ் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நாவின் 78ஆவது கூட்டத்தொடரில் அதிபர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் செப்டம்பர் 18 முதல் 21 வரை நடைபெறவுள்ள மாநாட்டில் செப்டம்பர் 21ஆம் திகதி அதிபர் உரையாற்றவுள்ளார்.
மிகவும் சிறந்த புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை அடிப்படையாகக் கொண்ட காலநிலை மாற்றத்திற்கு முகங்கொடுக்கக் கூடிய உலகளாவிய பொருளாதாரத்திற்கு மிகவும் சமமான மற்றும் விரைவான மாற்றத்திற்கான உலகளாவிய கூட்டு விருப்பத்தை நிரூபிப்பதில் ஒரு முக்கியமான அரசியல் மைல்கல்லை எதிர்பார்த்து, ஐ.நா பொதுச்செயலாளரால் கூட்டப்படுகின்ற காலநிலை அபிலாஷைகள் பற்றிய மாநாட்டிலும் ணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்
தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அபிவிருத்திக்கான நிதியியல் தொடர்பான ‘கடன் நிலைபேற்றுத் தன்மையை உருவாக்குதல் மற்றும் உலகளாவிய நிதிப் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் இடம்பெறும் உயர்மட்டக் கூட்டத்திலும் அதிபர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தமது நியூயோர்க் விஜயத்தின் போது , ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குடரெஸ் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இதேவேளை அமெரிக்காவில் உள்ள சுமார் 40 முன்னணி தனியார் வர்த்தக நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள இலங்கைக்கான பொருளாதார வாய்ப்புகள் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலிலும் அதிபர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கடல்சார் நாடுகளுக்கான மூன்றாவது ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலில் அதிபர் முக்கிய உரையாற்றவுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் அதிபருடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.