மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் சிகிச்சை நிலையத்தை திறந்து வைத்த அதிபர் ரணில்
மூன்றாம் இணைப்பு
முல்லைத்தீவு - மாங்குளம் ஆதார வைத்தியசாலை மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் சற்றுமுன்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
நெதர்லாந்து (Netherlands) அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் குறித்த சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் பிரதமராக இருந்த போது 2017ஆம் ஆண்டு இந்த நிலையத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
'உறுமய' வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலக அலுவலகங்களை உள்ளடக்கும் வகையில் 600 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் இவர்களுக்கான காணி உறுதிகளை அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் "உறுமய" திட்டத்தின் கீழ் 1,376 முழுஉரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வடக்கிற்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (26) முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) பகுதியில் மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் வழங்குகின்ற நிகழ்வில் கலந்து கொள்வதுடன் மாங்குளத்தில் (Mankulam) அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையத்தினை திறந்து வைக்கவுள்ளார்.
மாங்குளம் மகா வித்தியாலய மைதானத்திற்கு உலங்குவானூர்தியிலே அதிபர் ரணில் வந்திறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
இந்த நிலையில் மாங்குளம் நகரம் மற்றும் மாங்குளம் மகா வித்தியாலய மைதானத்தை சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |